எதாவது ஒரு சந்தர்ப்பத்தில்
மெல்ல வெளியே எட்டிபார்க்கிறது
அந்த கருப்பு பூனை
அது வரையில் எங்கே இருந்தது என்று தெரியாமலே
இருந்திருக்கிறது
எல்லாவற்றையும் வேடிக்கை பார்க்கும்
பார்வையாளனாக இருந்திருக்குமோ ……
குரோதம் தெறித்து விழுந்த ஏமாற்றத்தில்
வன்மம் வெடித்த உக்கிர பொழுதில்
புணர்ந்த பின் வந்த களைப்பில்
மிகுந்த பசியில் கிடைத்த தேநீரில்
காமம் பற்றிய அந்தரங்க உரையாடலில்
இயலாமையில் புதைந்து கரைந்தழுதபொழுது
எங்கோ விழுந்த உயிரின் இறக்கத்தில்
அவ்வப்போது எட்டிபார்த்து
ஏளனம் செய்கிறது
நான் இருந்துகொண்டே இருப்பேன் என்று ……